உள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்ய ஆர்வமில்லாத வேட்பாளர்கள்

ஓமலூர், டிச.12: ஓமலூர்  ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு  வருகிறது. அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில்,  சுயேட்சைகள் மற்றும் தலைவர் பதவிக்கு குறைந்தபட்ச அளவில் வேட்புமனு தாக்கல்  செய்து வருகின்றனர்.

ஓமலூர் ஒன்றியத்தில் 33  ஊராட்சிகள், 324 ஊராட்சி வார்டுகள், 27 ஒன்றிய கவுன்சிலர், 3 மாவட்ட  கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதேபோல், காடையாம்பட்டி ஒன்றியத்தில் 17 கிராம  ஊராட்சிகள் 186 ஊராட்சி வார்டுகள், 19 ஒன்றிய கவுன்சிலர், 2 மாவட்ட  கவுன்சிலர் ஆகிய பதவிகளும், தாரமங்கலம் ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள்,  165 ஊராட்சி வார்டுகள், 13 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர்  ஆகிய பதவிகளும் உள்ளன. இந்த பதவிகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய  தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காததால், வேட்புமனு தாக்கல்  செய்யாமல் உள்ளனர்.

ஊராட்சி தலைவர் பதவிக்கும், ஊராட்சி வார்டு  உறுப்பினர் பதவிக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.  மேலும், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கும்  சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். ஓமலூர் ஒன்றியத்தில்  ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 77  பேரும், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இருவரும், மாவட்ட ஊராட்சி  குழு உறுப்பினர் பதவிக்கு 2பேரும், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோல்,  காடையாம்பட்டி ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பேரும்,  ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 49 பேரும் வேட்புமனு தாக்கல்  செய்துள்ளனர். ஆனால், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு  உறுப்பினர் பதவிக்கு இதுவரை ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

 தாரமங்கலம்  ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 பேரும், ஊராட்சி வார்டு  உறுப்பினர் பதவிக்கு 25 பேர் மட்டுமே, கடந்த 3 நாட்களில் வேட்புமனு  தாக்கல் செய்துள்ளனர். ஆனால், ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  பதவிக்கு இதுவரை யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நாளை முதல் வேட்புமனு தாக்கல் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: