ஓமலூர் வட்டாரத்தில் பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு தயார்

ஓமலூர், டிச.12: பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்ய, ஓமலூர் வட்டாரத்தில் செங்கரும்பு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, தாரமங்கலம், ஓமலூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள ஓமலூர், கே.ஆர்.தோப்பூர், முத்துநாயக்கன்பட்டி, செம்மண்கூடல், காமலாபுரம், குருக்குபட்டி, அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கஞ்சநாயக்கன் பட்டி, பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி, சர்க்கரைசெட்டிபட்டி, தும்பிபாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கரும்பு பயிரிட்டுள்ளனர். கடந்தாண்டு மழையின்றி வறட்சி ஏற்பட்டதால், நடப்பாண்டு குறைந்த அளவே கரும்பு பயிரிட்டு உள்ளனர். 9 மாத பயிரான கரும்பு, மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

வரும் ஜனவரி 4ம் தேதி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்து விடும். தொடர்ந்து ஆருத்ரா தரிசனம், போகி, பொங்கல் என அடுத்தடுத்து விழாக்கள் நெருங்குவதால், ஜனவரி துவக்கம் முதல் கரும்பு வெட்டும் பணி சுறுசுறுப்பாக நடக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அதனால், ஒரு ஜோடி கரும்பு ₹100க்கு குறையாமல் விற்பனை செய்தால் மட்டுமே, கரும்பு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: