×

சேலத்தில் தடுப்பு பணிகள் தீவிரம் காசநோய் கண்டறிய அதிநவீன வசதியுடன் நடமாடும் ஆய்வுகூடம்

சேலம், டிச.12:சேலம் மாவட்டத்தில் காசநோய் கண்டுபிடிப்பிற்காக அதிநவீன வசதியுடன் கூடிய நடமாடும் ஆய்வுக்கூடம் கொண்டு வரப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு காசநோய் இல்லாத தமிழகத்தை படைக்கும் நோக்கத்தோடு திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தன் கீழ், டிசம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதி வரை சிறப்பு காசநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் காசநோய் மற்றும் பொது களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், குணம் பெற்ற காச நோயாளிகள் கொண்ட 23 குழக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டம் முழுவதும் வீடு வீடாக சென்று காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து, சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நடைபெறும் தீவிர காசநோய் கண்டறியும் முகாமிற்கு நடமாடும் காசநோய் கண்டறியும் அதிநவீன ஆய்வுக்கூடம் நேற்று வந்தது. இந்த அதிநவீன ஆய்வுகூடம், டிசம்பர் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் முகாமில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வுகூடத்தை, குடும்ப நலப்பணிகள் இணை இயக்குநர் மலர்விழி, துணை இயக்குநர் வளர்மதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன் மற்றும் காசநோய் துணை இயக்குநர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து இடைப்பாடியில் நடக்கும் காசநோய் முகாமிற்கு அதிநவீன ஆய்வுகூடத்தை அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து காசநோய் மருத்துவர் கோகுலகிருஷ்ணன் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் காசநோய் இல்லாத நிலை உருவாக்கும் வகையில் சேலத்தில் காசநோய் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் வீடு, வீடாக சென்று காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு வாரம் ெதாடர் இருமல், சளி, காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் ஆகியவை இதற்கான அறிகுறிகள். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு சளி பரிசோதனை செய்து, இலவசமாக எதிர்ப்பு மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சத்தான உணவுகள் எடுத்து கொள்ள நிக்ஷய் போஷன் திட்டத்தின் கீழ் மாதம் ₹500 வழங்கப்படுகிறது. தற்போது வரை நடத்திய முகாமில் மாவட்டத்தில் 34 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Tags : Salem ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!