கெங்கவல்லியில் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்

கெங்கவல்லி, டிச.12: கெங்கவல்லி பேரூராட்சியில் சுவேத நதிக்கரையில், குறுக்கே தரைப்பாலம் இல்லாததால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர். கெங்கவல்லி பேரூராட்சி 9வது வார்டுக்குட்பட்ட தெற்கு காடு பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தெற்கு காடு பகுதியில் உள்ள தர்மராஜர், பெரியாயி, தீபாஞ்சலியம்மன் கோயில்கள் உள்ளது. மழைக்காலங்களில் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆற்றைக் கடந்து பள்ளி மாணவர்களும், விவசாயிகளும் சிரமத்துடன் சென்றுவருகின்றனர். தண்ணீர் வரத்து அதிகரித்து ஆற்றை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டால் 8 கி.மீ தூரம் சுற்றி கெங்கவல்லிக்கு செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள தார்சாலை குண்டும், குழியுமான நிலையில் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். எனவே, சுவேத நதியின் குறுக்கே தரைப்பாலம் மற்றும் தார் சாலை அமைத்து தர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கையெழுத்து இயக்கம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டு, சென்னை தலைமைச் செயலருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

Related Stories: