×

ஜேஆர்சி மாணவர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, டிச.12: காவேரிப்பட்டணத்தில், ஜேஆர்சி மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடந்தது.  காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவில் ஜேஆர்சி மாணவர்களுக்கு 3 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், ஜேஆர்சி கொடியை ஏற்றி வைத்தும், ஹென்றி டுனான்ட் உருவப்படத்தை திறந்து வைத்தும், முகாமினை துவக்கி வைத்தார். இதில், கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், சாரணர் இயக்க துணை செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கன்வீனர் பாலமுருகன் வரவேற்றார்.  நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி, மத்தூர் கல்வி மாவட்டங்களின் அரசு உயர்நிலை, மேல்நிலை, நடுநிலை, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

முகாமில், மாணவர்களுக்கு மருத்துவம், பொதுப்பணிகள், காவல்துறை, வனத்துறை மற்றும் யோகா ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் பயிற்சி வழங்கினர். இரண்டாம் நாள் ஜல் சக்தி அபியான் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. மூன்றாம் நாள் நிறைவு விழா நடந்தது. விழாவிற்கு தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிசந்திரா தலைமை வகித்தார். காவேரிப்பட்டணம் ரெட்கிராஸ் செயலாளர் செந்தில்குமார், வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், அன்புசெழியன், பார்த்தீபன், ரவிச்சந்திரன், வினாயகம், ரவி, கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : JRC ,training camp ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்