×

வீரபாண்டி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

தேனி, டிச.12: வீரபாண்டியில் ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் தரமற்றதாக இருந்த பூரி, புரோட்டா போன்ற உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டது.தேனி மாவட்ட உணவுபாதுகாப்புத் துறையினருக்கு வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் அருகே உள்ள ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.  இதனையடுத்து, நேற்று உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் நவநீதன் தலைமையில் தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன், வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார அலுவலர் முருகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் வீரபாண்டி மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள சுமார் 17 கடைகளில் ஆய்வு நடத்தினர்.

ஆய்வில் தரமற்ற பூரி, சப்பாத்தி, புரோட்டா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், தரமற்ற குளிர்பானங்கள், தண்ணீர்பாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தரமற்ற சுமார் 150 கிலோ மாவில் தயாரிக்கப்பட்ட பூரி, சப்பாத்தி, புரோட்டாக்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்களை வைத்திருந்த 3 கடைக்காரர்களுக்கு தலா ரூ.2500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Food security officials ,hotels ,Veerapandi ,
× RELATED திருவாடானையில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி