×

பொட்டல்புதூர், கீழப்பாவூரில் பாரதியார் பிறந்த நாள் விழா

கடையம், டிச. 12: பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், சேவாலயா சார்பில் மகாகவி பாரதியாரின் 137வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை வகித்து பேசுகையில், கடையத்தில் பாரதி - செல்லம்மாள் நினைவாக அவர்களது முழு உருவச்சிலையை 137வது பிறந்த நாளில் நிறுவ வேண்டும் என்பது எங்களின் இலக்காக இருந்தது. இதற்காக நெல்லை கலெக்டரை சந்தித்து மனு அளித்திருந்தோம். சிலையானது தயாரான நிலையில் அரசு அலுவலர்களிடம் அனுமதி கிடைக்காமல் பணி தடைபட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக வாழ்ந்த மகாகவிக்கு கடையத்தில் சிலை வைக்கும் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து உரிய அனுமதி அளிக்க வேண்டும், என்றார்.கடையம் திருவள்ளுவர் கழகம் கல்யாணி சிவகாநாதன் சிறப்புரை ஆற்றினார். நெல்லை பஜாஜ் நிறுவனம் முரளி,  சேரன்மாதேவி  மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, பள்ளி தலைமை ஆசிரியர் திருமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மகாகவியின் பிறந்த நாளை முன்னிட்டு கடையம் சுற்றுவட்டார 20 அரசு பள்ளிகளிடையே பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற 40 மாணவர்களுக்கு மகாகவியின் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. சேவாலயா பணியாளர் சங்கிலிபூதத்தான்  நன்றி கூறினார்.இதேபோல் கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றம் சார்பில், நாடார் அம்மன் கோவில் மைதானத்தில் மகாகவி பாரதியாரின் 138வது பிறந்த நாள் விழா நடந்தது. மன்ற தலைவர் தீப்பொறி அப்பாத்துரை தலைமை வகித்தார். கீழப்பாவூர் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பால்துரை, விவேகானந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஜெயராமன், ஏழைகளுக்கு இலவச சேலை வழங்கினார். நிகழ்ச்சியில் கணேசன், செல்லச்சாமி, சுரேஷ்முருகன், முருகன், கதிரேசன், காளிமுத்து, சேகர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சாமி நன்றி கூறினார்.


Tags : Bharathiyar ,Birthday Party ,Keezhpavur ,
× RELATED வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில்...