×

பரமக்குடி பகுதியில் செங்கல் சூளைகளால் பள்ளத்தாக்கு 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் காலி

பரமக்குடி, டிச. 12: பரமக்குடி பகுதிகளில் செங்கல் சூளைகளுக்காக வெட்டி எடுக்கபட்ட மண்ணால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிந்துபோய், நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது, இதனால் அடியோடு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 200 செங்கல் சூளைகள் இயங்குகின்றன. இதில் 50 சூளைகள் பரமக்குடி வட்டாரத்தில் உள்ளன. செங்கள் சூளைக்காக போகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருந்தனேந்தல், மஞ்சகொள்ளை, பொட்டிதட்டி, மஞ்சூர், உரப்புளி உள்ளிட்ட வைகை ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்காக தினமும் 50க்கும் மேற்பட்ட லாரிகள், பொக்லைன், ேஜ.சி.பி. டிராக்டர் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இதனால் தினமும் 2 ஆயிரம் முதல் 2500 லோடுகள் மணல் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் செங்கல் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுவரையிலும் செங்கல் சூளைகளுக்காக பரமக்குடியைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய விளைநிலங்களில் 15 ஆயிரம் கோடி டன் மண்வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த பகுதியில் பெரிய பள்ளதாக்கு போல் காட்சியளிக்கிறது. மண் தோண்டிய இடங்களில் இதுவரையிலும் ஒரு புல் கூட முளைக்கவில்லை. தொடர்ந்து விவசாயிகளிடம்  விளைநிலங்களை வாங்கி கனிமவளம் மற்றும் சுரங்கத்துறையினரிடம் அனுமதிபெற்று மணல் வெட்டி எடுத்தாலும், அதிகளவு பள்ளங்களை உருவாக்கிவிடுகின்றனர். அதனால் அருகில் உள்ள விவசாயிகள் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

மேலும் விளைநிலங்களை தங்களுக்கு விற்பனை செய்யுமாறு விவசாயிகள் மிரட்டப்படுவதாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதிகளின் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., செங்கல் சூளை நடத்தும் உரிமையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டு, விவசாய விளைநிலங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய ஆர்வாலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி விவசாய ஆர்வலர் குமாரசாமி கூறும்போது, ‘பரமக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி மண் வெட்டி எடுத்து செல்கின்றனர். அனுமதி பெற்று மண் வெட்டினாலும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். தினமும் காலைமுதல் மாலை வரை பொட்டிதட்டி, மஞ்சக்கொல்லை, கருத்தனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான லாரிகளில் பல ஆயிரம் டன் மண் வெட்டி எடுத்து செல்கின்றனர். இதனை தடுக்க முடியாவிட்டாலும் முறைப்படுத்தப்பட நடவடிக்கை வேண்டும். பட்டா இடத்தில் மண் எடுக்க கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அனுமதி பெற்றுக்கொண்டு, வைகை ஆற்றில் மணல் திருடுவதும் அதிகரித்து வருகிறது. விவசாய நிலத்தில் மண் வெட்டி எடுப்பதை தடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : valley ,land ,Paramakudi ,
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...