ெதாடரும் டெங்கு காய்ச்சல் சுரண்டை மக்களை துரத்தும் ஏடிஸ் கொசு கலெக்டர் மீண்டும் ஆய்வு

சுரண்டை, டிச. 12: சுரண்டை பகுதியில் பரவி வரும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வரும் நிலையில், மீண்டும் இப்பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.

சுரண்டை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த நவம்பர் மாதத்தில் 13 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தென்காசி கலெக்டர் அருண்சுந்தர்தயாளன், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். இருப்பினும் காய்ச்சல் கட்டுக்குள் வரவில்லை. டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 24 ஆனது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், சங்கரன்கோவில் சுகாதார துணை இயக்குநர் வரதராஜன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.

எனினும் தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 27ஐ தொட்டதாக கூறப்படுகிறது. மேலும் சாதாரண காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்களும் ஏராளமானோர் உள்ளனர். சுரண்டை அண்ணா நகரில் மட்டும்   மணி மகன் அழகு சரவணன், சுப்பையா மகன் மாரி, முத்துப்பாண்டி மகன் சிவராமன், சுப்பிரமணியன் மகன் மதன், கண்ணன் மகன் சுடலை, சுப்பையா, செல்லப்பா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே நேற்று கலெக்டர் அருண்சுந்தர்தயாளன், சுரண்டை அண்ணா நகரில் வீடு வீடாக  திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் பேரூராட்சியின் சுகாதாரப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அண்ணா நகரில் உள்ள கிணற்று நீரில் குளோரின் அளவை சரிபார்த்தார். மேலும் பொதுமக்களிடம் டெங்கு கொசுவை ஒழிக்க தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆய்வில்  வீ.கே.புதூர் தாசில்தார் ஹரிஹரன், சங்கரன்கோவில் சுகாதார துறை துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் ரகுபதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி அபுல் கலாம் ஆசாத், வட்டார சுகாதார மேறப்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளர் கணேசன், ஆர்ஐ மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

‘‘2 பாறைகுழியை மூட வேண்டும்’’ சுரண்டை அண்ணா நகர் பகுதி மக்கள் றுகையில், எங்கள் பகுதியில் வாரம் ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. இதில் அரை மணி நேரம் நல்ல தண்ணீரும், அரை மணி நேரம் உப்பு தண்ணீரும் விநியோகிக்கப்படுகிறது. மேலும் தெரு அடிபம்பில் பிடிக்கும் தண்ணீர், விலைக்கு வாங்கும் தண்ணீர் என 4 வகையான தண்ணீரை பயன்படுத்துகிறோம். தண்ணீரை மாற்றிமாற்றி பயன்படுத்துவதால் காய்ச்சலுக்கு பாதிக்கப்படுகிறோம். மேலும் அண்ணா நகர் முதல் தெருவில் உள்ள 2 பாறைக்குழிகளை உடனடியாக மூட வேண்டும். இதில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொட்டப்படும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அப்புறப்படுத்த கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளோம், என்றனர்.

Related Stories:

>