×

ஊரெல்லாம் கனமழை கொட்டித் தீர்த்தும் திருச்செந்தூரில் குடிநீருக்கு பரிதவிக்கும் பொதுமக்கள்

திருச்செந்தூர், டிச. 12: ஊரெல்லாம் மழை பெய்தும் கோயில் நகரமான திருச்செந்தூரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். கோயில் நகரான திருச்செந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதே போல் திருச்செந்தூரிலும் பெய்த தொடர்மழையால் ஊரே வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு குளங்கள் நிரம்பின. இருப்பினும் திருச்செந்தூரில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கு பரிதவிக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்குள்ள பாரதியார் தெருவில் குடிநீர் வந்து 12 நாட்களாகிறது. பிடிஆர் தெருவில் 10 நாட்களாகிறது. மேல ரதவீதியில் 45 நாட்களாகியும் குடிநீர் வரவில்லை. இதையடுத்து இப்பகுதியில் மட்டும் 2 முறை லாரி  மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. சபாபதிபுரம் தெரு, தெற்குரதவீதி, தெப்பக்குளத்தெரு, ஜீவாநகர், முத்தாரம்மன் கோயில் தெரு, கிருஷ்ணன் கோயில் தெருக்களிலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லை. மேலும் வீரராகவபுரம் தெரு, வீரமகாளியம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. திருச்செந்தூர் பகுதிக்கு குரங்கணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே  ஏற்பட்ட உடைப்பால் இத்தகைய அவலம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு ஊரெல்லாம் மழை பெய்தும் திருச்செந்தூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பரிதவிக்கின்றனர். இதனிடையே திருச்செந்தூர் பஸ்நிலையம் மற்றும் அதன் அருகே பிரதான லைன் குடிநீர் குழாய்களில் வரும் குடிநீரை பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் வந்து குடங்களில் பிடித்துச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இனியாவது இதுவிஷயத்தில் பேரூராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், உடைந்த குழாய்களை சரி செய்து முறையாக தண்ணீர் சப்ளை செய்யவும் நடவடிக்கை எடுக்க முன்வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.அதிகாரிகளின் மெத்தனம் இதுகுறித்து திருச்செந்தூர் நகர திமுக மகளிர் அணியைச் சேர்ந்த அருணா என்பவர் கூறுகையில், ‘‘ஊரெல்லாம் மழை பெய்து வெள்ளக்காடான போதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது அதிகாரிகளின் மெத்தன போக்கையே காட்டுகிறது. தரமற்ற குழாய்களை பதித்துள்ளதன் காரணமாக  பைப்லைன்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பைப் உடைப்பால் குடிநீரை விநியோகம் செய்ய முடியவில்லை எனக் கூறுகின்றனர். எனவே, இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதோடு தரமான குழாய்களை பதித்து தங்குதடையின்றி தட்டுப்பாடின்றியும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : Civilians ,Thiruchendur ,
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...