×

மாயமாகும் டவுன் பஸ்களால் கிராம மக்கள் கடும் அவதி

நாசரேத், டிச. 12:  நாசரேத்- திருச்செந்தூர் வழித்தடத்தில் அடிக்கடி மாயமாகும் டவுன் பஸ்களால் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு மக்களும் கடுமையாக அவதிப்படுகின்றனர். திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 6.15 மணிக்கு புறப்படும் தடம் எண் 11 ஏ என்ற டவுன் பஸ் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, நல்லூர், குரும்பூர், நாலுமாவடி வழியாக நாசரேத்திற்கு செல்கிறது. இதே போல் மறுமார்க்கமாக நாசரேத்தில் இருந்து புறப்படும் டவுன் பஸ் திருச்செந்தூருக்கும், பின்னர் திருச்செந்தூரில் இருந்து நாசரேத்திற்கும் செல்கிறது. இதே போல் திருச்செந்தூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் தடம் எண் 11 பி என்ற டவுன் பஸ், ஆறுமுகநேரி, மூலக்கரை, அம்மன்புரம், குரும்பூர், நாலுமாவடி வழியாக நாசரேத்திற்கு செல்கிறது. இந்த பஸ் மறுமார்க்கமாக நாசரேத்தில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கும், பின்னர் திருச்செந்தூரில் இருந்து நாசரேத்திற்கும் செல்கிறது. இருப்பினும் இந்த 2 டவுன் பஸ்களும் அடிக்கடி மாயமாகின்றன.  இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், தனியார் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
குறிப்பாக இந்த டவுன் பஸ்களை எதிர்பார்த்து அநேக நாட்களில் வராதநிலையில் ஏமாற்றம் அடைகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ- மாணவிகள் அவதிப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
 எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி இந்த பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags :
× RELATED தூத்துக்குடி மக்களவை தொகுதி காங்....