×

சதுரகிரி கோயிலில் பவுர்ணமி வழிபாடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு, டிச. 12: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நேற்று நடந்த பவுர்ணமி வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலில், அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதன்படி கார்த்திகை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு, கடந்த 9ம் தேதி முதல், இன்று வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 9ம் தேதி நடந்த பிரதோஷ வழிபாட்டில் நூற்றுக்கணக்கானோர் வழிபாடு நடத்தினர். நேற்று பவுர்ணமியையொட்டி காலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு மலைப்பாதை வழியாகச் சென்றனர். தாணிப்பாறை வனத்துறை கேட்டில், வனத்துறையினர் சோதனை செய்த பின்னர் பக்தர்களை கோயிலுக்கு அனுப்பி வைத்தனர். பவுர்ணமியையொட்டி நேற்று இரவு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின் சுவாமி அங்கரிங்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். 4ம் நாளான இன்று பகல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதன்பின் அனுமதி இல்லை. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தார்.

Tags : devotees ,Purnami ,Chaturagiri Temple ,
× RELATED முத்தான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு..!!