கவிதையிலும், களத்திலும் அசத்தியவர்

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக எத்தனையோ பேர் தங்களது உயிர், உடைமைகளை இழந்துள்ளனர். பலர் கலை, இலக்கியங்கள் மூலம் தேசப்பற்றை வளர்த்து, வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். சிலர் வெளியில் தெரியாமலே மறைந்து விட்டனர். ஆனால், இலக்கியம், கவிதைகள் மூலம் நாட்டுப்பற்றையும், நாட்டின் விடுதலைக்காகவும் பாடுபட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர் மைதிலி சரண் குப்த். இன்று அவரது நினைவு நாள். அவரது வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வோமா?

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்திரபிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கானில் 1886, ஆகஸ்ட் 3ம் தேதி பிறந்தவர் மைதிலி சரண் குப்த். இவரது தந்தை மிகப்பெரிய வியாபாரி. ஆனாலும், இவர் எளிமையாக வாழ்ந்து வந்தார். பள்ளிப்படிப்பை அரசுப்பள்ளி, ஜான்சியில் உள்ள மெக்டானல் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.விளையாட்டு மீதான ஆர்வத்தால் படிப்பில் போதிய கவனத்தை இவரால் செலுத்த முடியவில்லை. இதனைத்தொடர்ந்து வீட்டிலேயே கல்வி கற்க தொடங்கினார். சமஸ்கிருதம், ஆங்கிலம், வங்க மொழிகளைக் கற்று தேர்ந்தார். இவரது சகோதரர் பிரபல எழுத்தாளராக விளங்கினார். இதனால் இவருக்கும் இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது. 12 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். தொடர்ந்து பல இதழ்களில் கவிதைகள் எழுதி பிரபலமானார். இவரது கவிதைகள் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது.

‘ரங் மே பங்’ இவரது முதல் மற்றும் முக்கிய படைப்பாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. படித்தவர் முதல் பாமரர் வரை அனைவருக்கும் எளிதாக புரியும் நடையை பின்பற்றி எழுதினார். 1916ல் ‘சாகேத்’ காவியம் படைத்தார். இது இவரது படைப்புகளிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து சமூக அவலங்கள் குறித்தும் எழுதி வந்தார். இவரது கவிதைகள் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக புரட்சியை ஏற்படுத்தியது. இந்துக்களின் அர்த்தமற்ற சடங்குகளை இவர் தீவிரமாக எதிர்த்தார். ‘பாரத் பாரதி’ என்ற தனது நூலில், இந்தியாவின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து சித்தரித்தார். இது சிறந்த ஆராய்ச்சி நூலாகவும் கருதப்பட்டது. ராமாயணம், மகாபாரதம், புத்தமதக் கதைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இவரது காவியங்கள் படைக்கப்பட்டன. ஜெயத்ரத் வத், கிஸான், விகட் பட், வைதாலிக், குணால், விஸ்வராஜ்ய, ஜஹுஷ், காபா - கர்பலா உள்ளிட்ட இவரது படைப்புகள் இந்தி இலக்கியத்தின் தன்னிகரற்ற படைப்புகளாக கருதப்படுகின்றன.

உமர் கயாமின் ‘ரூபயாத்’ கவிதைகள் மற்றும் ‘ஸ்வப்ன வாசவதத்தா’ என்ற சமஸ்கிருத நாடகத்தை இந்தியில் மொழிபெயர்த்தார். தன் அரசியல் கருத்துகளைக் கவிதை வடிவில் வெளியிட்டார். நாடகங்களும் எழுதியுள்ளார். பின்னர் மகாத்மா காந்தி, வினோபா பாவே போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்திலும் இணைந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். மகாத்மா காந்தி இவருக்கு ராஷ்டிர கவி என பாராட்டி கவுரப்படுத்தினார். இவரது ‘சாகேத்’ கவிதை நூலுக்கு ‘மங்கள் பிரசாத்’ விருதை இந்தி சாகித்ய சம்மேளனம் 1936ல் வழங்கியது. நாடு சுதந்திரம் அடைந்ததும் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டி.லிட். பட்டம் வழங்கி சிறப்பித்தன. ஹிந்துஸ்தானி அகாடமி விருது, பத்மபூஷண் விருதும் பெற்றவர். இந்தி இலக்கிய அன்னையின் ‘செல்லப்பிள்ளை’ என்று போற்றப்படும் மைதிலி சரண் குப்த் வாழ்நாள் கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்தார். பின்னர் தனது 78வது வயதில் டிச.12, 1964ம் ஆண்டு மறைந்தார்.

Related Stories: