குஜிலியம்பாறை அருகே சேதமடைந்த சாலை உடனே சீரமைப்பு

குஜிலியம்பாறை, டிச. 12: தினகரன் செய்தி எதிரொலியாக குஜிலியம்பாறை அருகே சேவகவுண்டன்புதூரில் சேதமடைந்த சாலை உடனே சீரமைக்கப்பட்டது. குஜிலியம்பாறை தாலுகா, பாளையம் பேரூராட்சியில் 2019- 2020ம் ஆண்டிற்கான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், கரூர் மெயின் ரோடு முதல் சேவகவுண்டன்புதூர் வரை மற்றும் சேவகவுண்டச்சி முதல் காட்டமநாயக்கன்பட்டி வரை என இரண்டு வழித்தடங்களில் மொத்தம் 3.700 கி.மீட்டர் தூரத்திற்கு, சுமார் ரூ. ஒன்றரை கோடி செலவில், கடந்த மே மாதம் புதிய தார்சாலை போடப்பட்டது.

இந்நிலையில் தற்போது பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகே கரூர் மெயின்ரோடு முதல் சேவகவுண்டன்புதூர் வரை செல்லும் வழித்தடத்தில் போடப்பட்ட புதிய தார்சாலை, ஏழு மாதம் கூட இன்னும் முடியாத நிலையில் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் முழுவதும் பெயர்ந்து, ஒரு அடி அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வந்தன. குறிப்பாக டூவீலர்களில் வருவோர் அடிக்கடி கீழே விழுந்து காயமுற்று வந்தனர். இதனால் சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் (டிச.10ம் தேதி) தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமி சேதமடைந்த சாலையை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர்ல சேதமடைந்த தார்சாலை சீரமைக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று சேதமடைந்த தார்சாலை சீரமைக்கப்பட்டது. சாலை சீரமைப்புக்கு செய்தி வெளியிட்டதினகரன் நாளிதழுக்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: