×

தேங்கி நிற்கும் கழிவுநீரால் டெங்கு அபாயம் தேர்தலை புறக்கணிக்க முடிவு

ஈரோடு, டிச.12: ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பழனியப்பா நகரில் சாக்கடை வசதி இல்லாததால் வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அப் பகுதி வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி 32வது வார்டுக்குட்பட்ட வெட்டுக்காட்டுவலசு விவேகானந்தர் ரோடு பழனியப்பா நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதியில், சாக்கடை வசதி, சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், அப் பகுதி அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, சாக்கடை வசதி இல்லாததால் அனைத்து வீட்டின் முன்பும் குழி தோண்டி கழிவுநீரை தேக்கி வைத்துள்ளனர். இதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் உடனடியாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

இல்லையெனில், மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட மக்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால், சாக்கடை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குழி தோண்டி தேக்கி வைக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளோம். சாலை வசதியும் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை. எங்களின் கோரிக்கை தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடமும், கலெக்டரிடமும் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அடிப்படை வசதி செய்து கொடுக்காவிட்டால் மாநகராட்சிக்கு எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...