பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

ஈரோடு, டிச.12:  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உருண்டை வெல்லம், நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. வெல்லம் தயாரிப்பதற்காக சத்தி, கோபி, பவானி, கவுந்தப்பாடி, பங்களாபுதூர், அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் ஆலைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆலைகளில், கரும்புகளை சாறு பிளிந்து கொப்பரையில் பாவு உற்பத்தி செய்து, நாட்டு சர்க்கரையாகவும், உருண்டை வெல்லமாகவும் தயாரிக்கின்றனர். உருண்டை வெல்லத்தை 30 கிலோ மூட்டையாக எடை வைத்து, சந்தைக்கு அனுப்புகின்றனர். அங்கு ஏலம் மூலம் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.மேலும், பெரும்பாலான வியாபாரிகள் நேரடியாக ஆலைகளுக்கு வந்து வெல்லம் வாங்கிச் செல்கின்றனர். ஈரோட்டில் தயாரிக்கப்படும் வெல்லம் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.  தமிழகத்தில் ஜன.15ம் தேதி பொங்கல் பண்டிகை என்பதால் மக்கள் பொங்கல் வைக்க வெல்லத்தை அதிகமாக பயன்படுத்துவார்கள். இதனால், ஈரோடு மாவட்டத்தில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு சில வியாபாரிகள் கரும்பாலைகளுக்கு நேரடியாக சென்று இப்போதே வெல்லங்களை கொள்முதல் செய்ய துவங்கி விட்டனர்.

இதுகுறித்து முள்ளாம்பரப்பில் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சி காரணமாக கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், கரும்பின் விலை உயர்ந்தது. ஒரு டன் கரும்பு வாங்க வெட்டுக்கூலியுடன் சேர்த்து ரூ.3,500 செலவாகிறது. இதுதவிர, கரும்பை கொண்டு வருவதற்கு வாகன வாடகை உள்ளது.  கரும்பு விலை உயர்ந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக வெல்லத்தின் விலை உயர்த்தப்படவே இல்லை. சர்க்கரை மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையை பொறுத்து வியாபாரிகளுக்கு நாங்கள் வெல்லத்தை விற்பனை செய்கிறோம். 30 கிலோ மூட்டை தரமான வெல்லம் ரூ.1,200 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கரும்பு விளைச்சல் குறைவாக இருப்பதால் ஒரு டன் கரும்புக்கு 80 கிலோ வெல்லம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. அதுவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 120 கிலோ வெல்லம் வரை உற்பத்தி செய்ய முடிந்தது. தற்போது 30 மூட்டை வெல்லம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எங்களிடம் இருந்து கோவில்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வெளிமாநில வியாபாரிகள் அதிகமாக வந்து வெல்லம் வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: