ரூ.43 கோடி மோசடி செய்த விவகாரம் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்

ஈரோடு, டிச. 12: ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகளிடம் 43 கோடி ரூபாய்க்கு ஜவுளிகளை வாங்கி மோசடி செய்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வழக்கை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றி உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.  ஈரோடு ஜெகநாதபுரம் காலனி எஸ்கேசி ரோடு 5வது வீதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி கோகுலகண்ணன் (46) மற்றும் பெருந்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த நூல் வியாபாரி அசோக் ஆகியோர் தங்களிடம் காடாதுணி, வேட்டி கொள்முதல் செய்து பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர்.  அதன்பேரில், ஈரோடு கோட்டை தெப்பக்குளம் பகுதி சீரங்க வீதியைச் சேர்ந்த கோட்டை ராமு (எ) ராமு (46), இவரது மனைவி மணிமேகலை, மகன் அருணாச்சலீஸ்வரன் (எ) அருண், இவரது தாயார் மல்லிகா, தங்கராஜன், இவரது மனைவி கார்த்திகா, தேவேந்திரகுமார், ராஜேஸ், கொல்லம்பாளையத்தை சேர்ந்த ஆனந்த், தெப்பகுளம் வீதியைச் சேர்ந்த வேலுமணி, செழியன் ஆகிய 11 பேர் மீது 7 கோடி ரூபாய்க்கு துணி வாங்கி மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், கோட்டை ராமு (எ) ராமு, இவரது மகன் அருணாச்சலீஸ்வரன் (எ) அருண், தங்கராஜன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த கும்பல் இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் 33 கோடி ரூபாய் அளவிற்கு ஜவுளிகளை வாங்கி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், இதுவரை இந்த வழக்கில் கைதானவர்களிடம் இருந்து பணமோ, சொத்துக்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. இதனால், ஜவுளி வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த வழக்கில்  போலீசாரும் மெத்தனமாக உள்ளனர்.  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: