×

தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டு தகுதி நீக்கம்

ஈரோடு, டிச.12: தேர்தல் செலவின கணக்குகளை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 19 பேர், ஒன்றியக்குழு உறுப்பினர் 183 பேர், ஊராட்சி தலைவர்கள் 225 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் 2097 பேர் என மொத்தம் 2524 பதவிகள் உள்ளன. இப்பதவிகளுக்கு நேர்முக தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது.இத் தேர்தலில், போட்டியிடுபவர்களுக்கான தேர்தல் செலவின தொகையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊராட்சி வார்டு உறுப்பினர் ரூ.9,000, ஊராட்சி தலைவர் ரூ.34 ஆயிரம், ஒன்றியக்குழு உறுப்பினர் ரூ.85 ஆயிரம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ரூ.1.70 லட்சம் வரை செலவு செய்யலாம் என ஆணையம் அனுமதித்துள்ளது.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவின கணக்குகளை முறையாக தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், உரிய காலத்திற்குள் தாக்கல் செய்ய தவறினால் தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாதபடி மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags : disqualification ,
× RELATED உலக ஸ்குவாஷ் இந்திய அணி விலகல்