டிச.18ல் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை

ஈரோடு, டிச.12: போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை டிச.18ம் தேதி நடக்கிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.) மாநில துணைத்தலைவர் முருகையா கூறினார்.

இது குறித்து அவர் ஈரோட்டில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழ்நாடு  அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 1ம்  தேதி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதியுடன் முடிந்தது. ஊதிய உயர்வு  பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதத்திற்கு முன்பே துவங்கியிருக்க வேண்டும். இது தொடர்பாக  தி.மு.க., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கோரிக்கை மனு வழங்கி உள்ளோம். ஆனால், இதுவரை அரசு சார்பில்  பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதற்கிடையே,  வரும் 18ம் தேதி தொழிலாளர்  நல ஆணையர் பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களை அழைத்துள்ளார். ஊதிய உயர்வு நிலுவை, பதவி உயர்வு, சீருடை தேவையான  அளவு வழங்குதல், வசூல்படி, சிறப்பு பஸ் இயக்கத்திற்கான கூடுதல் ஊதியம், 480  நாட்கள் பணி முடித்தவர்களை பணிநிரந்தரம் செய்வது போன்ற கோரிக்கைகள்  குறித்து பேச உள்ளோம். இதற்கு தீர்வு கிடைத்த பின்புதான் புதிய ஊதிய  உயர்வு குறித்து பேசுவோம். புதிய ஊதிய உயர்வில் 30 சதவீத உயர்வு  கேட்டுள்ளோம். ஒப்பந்த தொழிலாளர்களாக 20 ஆயிரம் டிரைவர்கள், 10 ஆயிரம்  கண்டக்டர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த மார்ச் மாதத்திற்கு  பின்பு ஓய்வு பெற்றவர்கள், ஏற்கனவே ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய  நிலுவை தொகை 7 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேச உள்ளோம். எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால்  போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: