×

இன்னும் 3 நாட்களே உள்ளதால் சம்பா, தாளடி பயிரை காப்பீடு செய்ய தஞ்சை விவசாயிகளுக்கு அழைப்பு

தஞ்சை, டிச. 12: இன்னும் 3 நாட்களே உள்ளதால் தஞ்சை வட்டாரத்தில் சம்பா, தாளடி பயிரை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 14 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் வரும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து காத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன்பெறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பதிவு செய்ய இயலும். கடன்பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும்.

பயிர் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு ரூ.465 செலுத்த வேண்டும். விவசாயிகள் காப்பீடு செய்யும்போது முன்மொழிவு படிவத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் தெளிவான முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும். கட்டண தொகையை செலுத்திய பின்பு அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்று கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்து கொள்ள வேண்டும். இயற்கை இடர்பாடுகளை யாராலும் கணிக்க இயலாது என்பதால் விவசாயிகள் கடைசி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே காப்பீடு செய்து கடைசி நேர பதிவில் ஏற்படும் பல்வேறு சிரமங்களை தவிர்க்கலாம். இவ்வாறு தஞ்சை வேளாண்மை உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

Tags : taluk farmers ,Samba ,
× RELATED சம்பா, தாளடி பருவத்தில் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்