உள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் ஒரே நாளில் 469 பேர் மனு தாக்கல்

கோவை,டிச.12:  கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கியது. நேற்று ஒரே நாளில் 469 பேர் மனுதாக்கல் செய்தனர். தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் துவங்கியது. கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. மேலும், 228 கிராம ஊராட்சிகளில் 2,034 வார்டு கவுன்சிலர், 155 மாவட்ட கவுன்சிலர், 228 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, 17 மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதனிடையே நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 17 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 106 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 346 பேரும் என மொத்தம் 469 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

முதல் நாள் 41 பேர் மனு தாக்கல் செய்தனர், இரண்டாம் நாள் 78 பேர் மனு தாக்கல் செய்தனர், மூன்றாம் நாளான நேற்று  469 என மொத்தம் இதுவரை 588 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்காக 1520 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 12 ஆயிரத்து 300 அரசு அலுவலர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பணி ஒதுக்கீடு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கணினி மூலம் ரேண்டம் முறையில் நடந்தது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடுவர்களுக்கு எந்தந்த வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகள் என ஒதுக்கப்படும். அதன்பின்பு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டணமில்லா தொலைபேசி எண்: கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களுக்கும் வருகிற 27 மற்றும்  30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றன. இதில் தேர்ல் விதிமுறை மீறல்கள் தொடர்பான புகார்களை தேர்தல் பிரிவு அதிகாரிகளிக்கு தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திறக்கப்பட்டது. 1800-599-6000 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 0422-2301586 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் துணை வட்டார வளர்ச்சி நிலையில் அலுவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் தெரிவிக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் வேண்டுகோள் தெரிவித்துள்ளனர்.

Tags : body election ,
× RELATED பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: 557 மனுக்கள் குவிந்தன