×

மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 312 பேருக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி

கோவை,டிச.12:  கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்கள் 312 பேருக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் தொடர்பான பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சு திறனை மேம்படுத்தவும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்திற்கு 90 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 45 நிமிடங்கள் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி அளிக்கும் வகையில் முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களுக்கு கோவை ராஜ வீதி துணிவணிகர் சங்க பள்ளி, காரமடை, சூலூர், பொள்ளாச்சி ஆகிய 4 இடங்களில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ராஜவீதி துணிவணிகர் சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிரைமரி பள்ளி ஆங்கில ஆசிரியர்கள் 40 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், காரமடை, சூலூர், பொள்ளாச்சி பகுதிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான ஆங்கில ஆசிரியர்கள் 272 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 312 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆங்கிலத்தில் மாணவர்களை எப்படி சரளமாக பேச வைப்பது. அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags : government school teachers ,
× RELATED ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி அரசு...