×

நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம் பைக்கில் இருந்து விழுந்து வாலிபர் பலி

கோவை  டிச.12: கோவை அருகே நாய் குறுக்கே பாய்ந்ததில் பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார். கோவையில் அதிகரிக்கும் நாய் தொல்லையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேற்குவங்கத்தை சேர்ந்தவர் மின்டு மோத்தல்(38). இவர் கோவை அடுத்த  சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி தொழிலாளியாக  வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது பைக்கில் கோழிக்கறி வாங்க  செலக்கரிசல் சென்றார். கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நாய் பைக்கின் குறுக்கே ஓடியது. இதனால் கட்டுப்பாட்டை  இழந்த மின்டு மோத்தல் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த  காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சூலூர் அரசு  ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தார்.

இதேபோல் சாலைகளில் நாய்கள் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி காயம் அடைவதும், மரணமடைவதும் தொடர்கதையாகிறது.  கோவையை பொறுத்தவரை நகரத்தை காட்டிலும் புறநகர் பகுதிகளில் சமீப காலமாக நாய் தொல்லை மிக அதிகமாக உள்ளது. சாலையில் செல்வோரை துரத்துவது மட்டுமல்லாமல், திடீரென சாலையின் குறுக்கே அங்குமிங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் குறிப்பாக பைக் ஓட்டி செல்பவர்கள் ஒருவித பயத்துடனேயே செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்தில் சிக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்