×

அபாய நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வீட்டு வசதி வாரியத்தை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 12: வீட்டு வசதி வாரியத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை (13ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. கோவை  மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான  கார்த்திக் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கோவை  சிங்காநல்லூர் உழவர்சந்தை அருகில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் 17.55  ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் 960 அடுக்குமாடி  குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை, கடந்த 35 வருடங்களுக்கு முன்பு,  பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இந்த வீடுகள் அனைத்தும்  சிதிலமடைந்து, பாழடைந்து, எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய  நிலையில் உள்ளன. முறைகேடான கட்டுமானமே இதற்கு காரணம். தமிழக அரசும், வீட்டு  வசதி வாரியமும்தான் இதற்கு முழு பொறுப்பு. இந்த குடியிருப்புகளில்  வசிக்கும் மக்கள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இனி எங்கு செல்வது? என  தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் தவிப்பதை போல் உள்ளனர்.

இது குறித்து,  கடந்த 2016-ம் ஆண்டு, 2017-ம் ஆண்டு ஆகிய 2 வருடங்களிலும் நடைபெற்ற தமிழக  சட்டமன்ற நிதிநிலை கூட்டத்தொடரிலும், 14.06.2018 அன்று நடந்த சட்டமன்ற  நிதிநிலை கூட்டத்தொடரிலும் பேசியுள்ளேன். புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கும்  வரை உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டும் என  வலியுறுத்தினேன். ஆனால், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து நாளை (வெள்ளி) மாலை 4  மணிக்கு சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற உள்ளது. இதில், தி.மு.க.வினர் பெரும் திரளாக பங்கேற்பார்கள். இவ்வாறு கார்த்திக் எம்.எல்.ஏ. கூறினார்.

Tags : DMK ,apartment board housing Demonstration ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு