×

குன்னூர் அருகே பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லும் சாலை சீரமைப்பு பணி தீவிரம்

குன்னூர்,டிச.12: குன்னூர் பகுதியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உலிக்கல் பஞ்சாயத்திற்குட்பட்ட   ஆனைப்பள்ளம், சடையன் கொம்பை, சின்னாலக்கொம்பை ஆகிய பழங்குடியினர்   கிராமங்கள் உள்ளது.  அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ள இந்த  கிராமங்களில் குறும்பர் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். கடந்த  40 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்பு இந்த பகுதியில் சாலையை சீரமைக்க 1.50  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று  வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலை முழுமையாக அடித்து  செல்லப்பட்டது. மேலும், பல இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் விழுந்ததால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  சுற்றியுள்ள பழங்குடியின கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப  முடியாமலும், மேலும், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை 6 கி.மீ. தொலைவு வரை சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.மேலும்,  இந்த பகுதியில் மக்கள் வெளியே வரமுடியாததால் அதிகாரிகள் ரேஷன் உள்ளிட்ட  அத்தியாவசிய  பொருட்களை பழங்குடியினர் வீடுகளுக்கு சென்று வழங்கி வந்தனர்.  

சிறிய அளவிலான வாகனங்கள்கூட செல்ல முடியாமல் சாலை முழுவதுமாக  பாதிப்படைந்தது. இதனால் அடிப்படை பொருட்களை வழங்க முடியாத நிலை  ஏற்பட்டது. எனவே அடித்து செல்லப்பட்ட சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கடந்த 5ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகிருந்தது.  இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அதிகாரிகளின் மேற்பார்வையில் மூன்று  ஜே.சி.பி. மூலம் சாலையில் உள்ள பாறைகள் மற்றும் மண் சரிவுகளை சீரமைக்கும் பணி  துவங்கியுள்ளது. மேலும், அப்பகுதியில் மீண்டும் புதிய சாலைகள் அமைக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : villages ,Coonoor ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை