கூடலூர், பந்தலூர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும்

கூடலூர், டிச.12: கூடலூர், பந்தலூர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சங்கம் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள சார்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதி மன்றம் ஆகிய நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றங்களில் கடந்த பல மாத காலமாக நீதிபதிகள் பணியில் இல்லாததால் வழக்கு தொடர்பான விசயங்களில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும், ஐந்தாயிரம் வழக்குகள் நீதி கிடைக்காமல் தேக்கமடைந்துள்ளதாகவும் கூடலூர் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கூடலூரில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக துவக்கப்பட்ட சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2018 மே மாதம் முதல் சுமார் ஒன்றரை வருடமாக நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. நீதித்துறை நடுவர் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் கடந்த 2019 ஏப்ரல் மாதம் பணியிட மாறுதலில் சென்றதை அடுத்து கடந்த 8 மாதமாக நீதிபதி பணியிடம்  காலியாக உள்ளது.  பந்தலூர் நீதிமன்ற நீதிபதி கடந்த 2019 ஜூலை மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் அங்கும் கடந்த 5 மாத மாக நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது.

 இது குறித்து நீதித்துறை உயர் அலுவலகங்களுக்கு முறையாக தகவல் அளித்தும் இதுவரை பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த ஜூன் மாதத்தில் நியமிக்கப்பட்ட பயிற்சி நீதிபதிகளும் பதவி ஏற்று உடனடியாக பயிற்சிக்கு சென்றுவிட்டனர்.
சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட இப்பகுதிகளில் 20 வருவாய் கிராமங்கள், ஒரு கோட்டம், 2 தாலுகாக்கள், இரண்டு நகராட்சிகள், 10 காவல் நிலையங்கள், 2 காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், 10 வனச்சரகங்கள், ஒரு மாவட்ட வன அலுவலகம் உள்ளிட்டவை அடங்குகின்றன. காவல்துறை, வனத்துறை வழக்குகள் உள்ளிட்ட சுமார் ஐந்தாயிரம் வழக்குகள் தீர்வு காண முடியாமல் வாய்தாவிற்கு மேல் வாய்தா வாங்கி காலம் கடத்தப்பட்டு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது.

 கைதிகளை ரிமாண்ட் செய்யவும், பெயிலில் எடுக்கவும் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இருந்து மாவட்ட தலைநகரான ஊட்டிக்கு  50 முதல் 100 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதைகளில் பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.  நான்கு நீதிபதிகள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது ஊட்டியில் இருந்து வாரம் ஒருமுறை ஒரே ஒரு நீதிபதி மட்டும் வந்து செல்வதால் வழக்கு தொடர்பான பயனாளிகளுக்கு எந்த வித பயனும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட பொறுப்பு நீதிபதி மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஊட்டிக்கு வந்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட குழு ஆகியோரிடம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். உயர் நீதியரசர்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் வழக்கறிஞர்களின் போராட்டம் தீவிரமடையும் என்று
கூடலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் வர்கீஸ், செயலாளர் ஜெய்னுல்பாபு மற்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Judges ,courts ,Cuddalore ,
× RELATED கூடலூர், பந்தலூர் நீதி மன்றங்களில்...