விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்பு அவசியம்

ஊட்டி, டிச.12: விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்பு அவசியம் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: உலகின் முதல் விஞ்ஞானி விவசாயி. ஆனால், அறிவியல் வளர்ச்சியையும். விவசாய வளர்ச்சியையும் ஒன்றிணைக்க வேண்டும். பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே விவசாயம் குறித்த மாற்றத்தை உருவாக்க முடியும். அழுத்தம் தரும் போதும், வாய்ப்பு தரும்போதும்தான் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். 30 ஆண்டுக்கு முன்னர் சிறிய கூரை கட்டிடத்தில் இருந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது பிஎஸ்எல்வி 50வது செயற்கைகோளை செலுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா உட்பட பிற நாட்டுகளின் செயற்கை கோள்களை சுமந்து செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நிலவில் நீர் இருப்பதை சந்திராயன்தான் கண்டுபிடித்தது. இன்று 10 செயற்கை கோள்களை வெற்றிகரமாக நாம் விண்ணில் செலுத்தியுள்ளோம் என்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவின் 75வது செயற்கைகோள் வெற்றிக்கரமாக செலுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. அதுவும் பாரதியார் பிறந்த தினத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது பெருமைக்குரியது.விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் மிக சிறிய செயற்கைகோள் மட்டுமே செலுத்திய இந்தியா, தற்போது பல டன் எடையிலும் லட்சக்கணக்கான கி.மீ. தூரத்துக்கும் செலுத்தும் அளவுக்கு இத்துறையில் நமது வளர்ச்சி உள்ளது.சந்திரயான் சோதனையே இதற்கு அத்தாட்சி. நிலவுக்கான ஆராய்ச்சியிலும் வழக்கமான பாதையை விட துருவ வட்டப்பாதையில் நாம் ஆய்வு நடத்துகிறோம். எதிர்காலத்தில் இதைவிட கூடுதலான ஆராய்ச்சிகளுக்கு தனியார் பங்களிப்பும் அவசியம். நாட்டின் பாதுகாப்பு உட்பட முக்கிய அம்சங்களை மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, ஏனையே துறைகளில் தனியார் பங்களிப்பு செத்தினால் பல்வேறு இலக்குகளை அடையலாம், என்றார். விழாவில் பள்ளி தலைவர் செந்தில் ரங்கராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்

Tags :
× RELATED ஆசிரியர்கள் 66 பேர் பங்கேற்பு