×

தானிய பயிர்களை சாப்பிடும் பறவைகளால் விவசாயிகள் பாதிப்பு

திருப்பூர், டிச. 12:   திருப்பூர்  மாவட்டத்தில் வேளாண் விளைப்பொருட்களை மயில்கள் மற்றும் கிளிகள்  கொத்தி சாப்பிடுவதால் தானிய  விவசாயிகளுக்கு போதிய சாகுபடி இன்றி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  திருப்பூர் மாவட்டம்  கோவில்வழி, நல்லூர், பொங்கலூர், காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம்,  மடத்துக்குளம், குடிமங்கலம், மங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த  விவசாயிகள் தற்போது பெய்த மழையால் பல ஆண்டுகளாக வானம் பார்த்த பூமியாக  இருந்த நிலத்தில் மக்காச்சோளம், கம்பு, ராகி, வெள்ளைச்சோளம் அதிகளவு  பயிரிட்டுள்ளனர். அமராவதி பழைய, புது ஆயக்கட்டு பாசனம்,  பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனம், கீழ் பவானி பாசனம் ஆகியவற்றின் பயன்பெரும்  விவசாயிகள் தொடர்ந்து மக்காச்சோளம், கம்பு, ராகி, சோளம் பயிரிடுகின்றனர்.  விவசாயிகள் தங்கள் வசதிக்கேற்ப பணத்தை செலவிட்டு நிலத்தை உழுது விதை  தானியங்களை வாங்கி விளைநிலங்களில் விதைக்கின்றனர். மயில்கள், கிளிகள் பல்வேறு வகையான  பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து விதைகளையும், விளைந்த  தானியங்களை கொத்தி சாப்பிடுகிறது. இதனால் விவசாயிகள் பறவைகளை விரட்ட துணி  பொம்பைகள் வைத்தும், பல்வேறு கலரில் துணிகளை பறக்கவிட்டு பறவைகளை விரட்டும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  

 ஆனால் விவசாயிகளின் அனைத்து  முயற்சிகளும் வீணாகி வருகிறது. ஒரு சில இடங்களில் மயில்கள் மர்மமான  முறையில் இறக்கும்போது எந்த காட்டில் மயில்கள் இறந்து கிடக்கிறதோ அந்த  காட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர். இதனால்,  மயில்களை விரட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இது குறித்து நல்லதங்காள் ஓடை பாசன விவசாயிகள் கூறியதாவது: தற்போது பெய்த பருவ மழையை நம்பி  மக்காச்சோளம், ராகி, கம்பு ஆகியவற்றின் விதைகளை கடன் வாங்கி நடவு  செய்துள்ளோம். இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மயில்கள், கிளிகள் நடமாட்டம்  உள்ளது. நடவு விதைகளையும் கதிர் முற்றிய தானியங்களை பறவைகள் கொத்தி சாப்பிடுகிறது.  இதனால் எங்களுக்கு போதிய சாகுபடி கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. மயில்களை  விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள்  கூறினர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...