×

செங்கழனிபுதூர், கழுகரை பகுதியில் 24 மணி நேரமும் இயங்கும் டாஸ்மாக் கடை

உடுமலை, டிச. 12: உடுமலை அருகே மடத்துக்குளம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட கணியூர் சாலை கழுகரையிலும், குமரலிங்கம் சாலை செங்கழனிபுதூரிலும் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த இரண்டு கடைகளும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், குடிமகன்களால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக நீலம்பூர், கண்ணாடிபுத்தூர், பாப்பான்குளம், குமரலிங்கம் செல்லும் 2 சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
மதுகுடித்துவிட்டு அரைகுறை ஆடையில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெண்கள் நடமாட முடிவதில்லை. இந்த 2 கடைகளிலும் பார் அனுமதி காலாவதியான பின்னரும், ஆளும் கட்சி பிரமுகர்களின் நேரடி கண்காணிப்பில் சட்ட விரோதமாக பார்கள் செயல்படுகின்றன. இங்கு 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது.

 இது பற்றி மடத்துக்குளம் பேரூர் கழக தி.மு.க. செயலாளர் துரை.பாலமுரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கழுகரை, செங்கழனிபுதூரில் அதிகாலை 5 மணி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. இது பற்றி போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், புகாரை வாங்க மறுக்கின்றனர். ஆளும்கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் கூட்டு வைத்துக்கொண்டு சட்ட விரோதமாக செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.இனியும் இதே நிலை தொடர்ந்தால், தமிழக அரசையும், மடத்துக்குளம் காவல்துறையையும் கண்டித்து, பொதுமக்களை திரட்டி பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் தி.மு.க. சார்பில் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Task Shop ,Chengazhaniputhur ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின்...