×

கருவேப்பிலங்குறிச்சியில் தீப எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

விருத்தாசலம், டிச. 12: விருத்தாசலம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளில் இயங்கி வரும் பிரபலமான மளிகை கடையில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீப எண்ணெய்யை பொதுமக்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்.
அந்த தீப எண்ணெய்யை பயன்படுத்திய பொதுமக்கள் விளக்கில் ஊற்றி, பற்ற வைக்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது. இதனால் பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் என 10க்கும் மேற்பட்டோருக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு, கடை நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. பாதிப்படைந்த பொதுமக்கள் காவல்துறையிடம் சென்று, எண்ணெய், உளுந்து,  கோதுமை, குழந்தைகள் சாப்பிடும் பொருட்கள் என அனைத்திலும் கலப்படம் இருப்பதாகவும், மலிவான விலையில் தருவதாக கூறி காலாவதியான பொருட்களை விற்பதாகவும், தீப எண்ணெய்யில் எரியக்கூடிய பொருட்கள் கலப்படம் செய்து விற்பனை செய்வதாகவும் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில்  காவல்துறையினர்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் கடையின் முன் குவிந்து கடையை மூடக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் அவர்கள் வாக்குவாதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fire ,Kavervelangkurichi ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா