×

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பெயரளவுக்கு நடந்த சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி, டிச. 12: கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.  மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் குமார் தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நேரு, தொழில்நுட்ப வல்லுநர் கண்ணன், டாக்டர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் சில மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், மாதத்தில் ஒரு நாள் 2வது வாரம் புதன் கிழமை அன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றன. இந்த முகாமில் அடையாள அட்டை பெறாதவர்கள் புதிய அட்டை பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த சிறப்பு முகாமிற்கு கை கால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவர்கள், வாய்பேச முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு புதிய அடையாள அட்டை விண்ணப்பித்தால், கண் மருத்துவர், தொழுநோய் மருத்துவர், காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர், மன நிலை சிகிச்சை பிரிவு மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் சிறப்பு முகாமிற்கு வருவதே இல்லை இதனால் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகளை உடனே பெற முடியாமல் அவதிப்பட்டு பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக குற்றம் சாட்டினர்.   
 
மேலும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் மேல் மாடிக்கு வரமுடியாமல் உறவினர்கள் மூலம் இரண்டு மூன்று பேர் தூக்கி கொண்டு வருகின்றனர். அதில் சிலர் மேல் மாடிக்கு அழைத்து வர உறவினர்கள் யாரும் இல்லாததால் கீழ் தளத்திலேயே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அரசு மருத்துவமனையில் தரை தளத்தில் உள்ள ஒரு அறையில் சிறப்பு முகாம் நடத்த வேண்டி பலமுறை மாவட்ட மாற்றுத்திறனாளி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பெயர் அளவுக்கு தான் மாற்றுத்திறனாளி சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினர்.
எனவே இனியாவது மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு முகாமில் அனைத்து பிரிவு மருத்துவர்கள் கலந்துகொள்ள நடவடிக்கை எடுப்பதோடு தரைதளத்தில் உள்ள ஒரு அறையில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Special Camp ,Kallakurichi Government Hospital ,
× RELATED திருச்சி சிறப்பு முகாமில் இருந்த...