×

உள்ளாட்சி தேர்தலையொட்டி 3வது நாளில் 169 பேர் வேட்புமனு தாக்கல்

பெரம்பலூர், டிச. 12: பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக பகுதிகளை சேர்ந்த 1,237 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் 27ம் தேதி முதல்கட்டமாக பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியங்களுக்கும், 30ம் தேதி 2ம் கட்டமாக ஆலத்தூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடத்தப் படுகிறது.
பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இதில் 2 நாட்கள் மந்தமான மனுதாக்கல் நடந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை தடையின்றி நடத்த அனுமதி வழங்கியது, சுப முகூர்த்த நாள், முழு பவுர்ணமி போன்ற காரணங்களால் மனுதாக்கல் 3ம் நாளான நேற்று சூடுபிடித்தது. இதன்படி 3வது நாளான நேற்று ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்துக்கு ஒருவரும், ஊராட்சி தலைவர் பதவியிடத்துக்கு 44 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கு 124 பேர் என ஒரே நாளில் 169 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 3 நாட்களில் இதுவரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 209 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 49 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்துக்கு ஒருவரும் என மொத்தம் 259 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : body elections ,
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாஜக...