×

தலைவர் பதவிகளை மலைவாழ் மக்களுக்கு ஒதுக்க வேண்டும்

சின்னசேலம், டிச. 12: கல்வராயன்மலையில் தலைவர் பதவிகளை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்காமல், மலைவாழ் மக்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று அரசு, கலெக்டருக்கு மலையாளி பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஷெட்டியுல்டு டிரைப் (மலையாளி) பேரவை மாவட்ட செயலாளர் மாணிக்கம் அரசு மற்றும் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜாகீர்தார் வசம் இருந்தது. அதை அரசு 1976ல் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கல்வராயன்மலை முழுவதும் மலைமக்களே அதிகம் வசிக்கின்றனர். கல்வராயன்மலை மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக பஞ்சாயத்து சட்டத்தின்படி கல்வராயன்மலையை 15 ஊராட்சியாகவும், ஒரு ஊராட்சி ஒன்றியமாகவும் வரையறை செய்யப்பட்டு பழங்குடியினருக்கான ஊராட்சி ஒன்றியமாக கல்வராயன்மலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெற உள்ளாட்சி தேர்தலுக்கான வரையறையின்படி கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியும், பாச்சேரி, வஞ்சிக்குழி, கரியாலூர் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியும் பொதுப்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த ஒதுக்கீடு முறை மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருக்கும் என மலைமக்கள் புலம்புகின்றனர். கல்வராயன்மலையில் பொதுவாகவே 60,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். எனவே அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியின மக்களுக்கே ஒதுக்கீடு செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக தலைவர் பதவிகளை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்காமல் பழங்குடியின மக்களுக்கே ஒதுக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.  



Tags : hill country ,
× RELATED ஆயுளைக் காத்துத் தந்த அற்புதத் தலம்