14ம் தேதி மக்கள் நீதிமன்றம்

புதுச்சேரி, டிச. 12: புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், உச்சநீதிமன்றத்தின் நீதியரசருமான ரமணா உத்தரவின் படியும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசரும், புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான நீதியரசர் சுப்பையாவின் வழிகாட்டுதலின் படியும் வரும் 14ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான துவக்க விழா காலை 10 மணிக்கு புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அதேபோன்று காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாகே மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், கணவன் மனைவி பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் வங்கி கடன் சம்பந்தப்பட்ட நேரடி வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படவுள்ளது.

Advertising
Advertising

 துவக்க விழாவில், புதுவை தலைமை நீதிபதி தனபால், முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், கூடுதல் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதிபதி, குற்றவியல் நடுவர்கள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர் முத்துவேல், துணை தலைவர் கமலினி, செயலாளர் தாமோதரன் மற்றும் சங்க நிர்வாகிகள், அரசு வழக்கறிஞர்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், வழக்காளிகள் பங்கேற்கவுள்ளனர்.

 நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என 4,126 வழக்குகள் எடுத்து கொள்ளப்படவுள்ளது. அதற்காக புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு அமர்வும் என மொத்தம் 11 அமர்வுகள் செயல்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: