×

விவசாயிகள் கோரிக்கை மூலிகைகள் வளர காரணமான கள்ளி வேலி செடிகளை அழித்து கம்பி வேலிஅமைக்கும் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

க.பரமத்தி, டிச.12: அரிய வகை மூலிகைகள் வளர காரணமான கள்ளிவேலி செடிகளை அழித்து கம்பி வேலி அமைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் 30-ஊராட்சிகள் உள்ளன. இதில் உள்ள கிராம புறங்களில் உள்ள விளை நிலங்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு வேலியாக இருந்தது கள்ளிவேலி செடி. விவசாயிகள் வரப்பு ஓரம் இதை நட்டு மற்றவர்கள் நிலத்திற்கு கால்நடைகள் சென்று பயிர்களை சேதப்படுத்ததாமல் பாதுகாத்து வந்தனர்.

இந்த கள்ளிவேலி நன்கு அடர்ந்து வளர்ந்து விட்டால் மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் கள்ளி வேலி செடிகள் இருக்கும் பகுதியில் அறிய வகை மூலிகை செடிகளான பிரண்டை, கருடன்கிழங்கு, கற்றாழை, மூஷ்டக்கொடி, சூரைச்செடி, முடக்கற்றான், கோவைக்காய், பெருமருந்து கொடி போன்ற செடிகளும் செழிப்பாக வளர்வது இயற்கை. முன்னோர்கள் இந்த அரியவகை மூலிகை செடிகளை பறித்து அதில் இருந்து வரும் சாறு மற்றும் காய்களை பயன்படுத்தி பல்வேறு தீராத வியாதிகளை நோய்களை தீர்த்து வைத்தனர். குறிப்பாக, பிரண்டை மூலநோய் மற்றும் மூட்டுவலியை போக்கும். பெரு மருந்து கொடி கால்நடைகளுக்கு ஏற்படும் அஜீரணக்கோளாறு, வயிறு தொடர்பான வியாதி, விஷகடிக்கு உகந்த மருந்து. கருடன்கிழங்கு மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உண்டாகும் தோல்வியாதியை தீர்க்க வல்லது. கற்றாழை சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சி தரும் மேலும் வயிற்று எரிச்சலையும் தடுக்கும். மூஷ்டக் கொடி குடல்புண்களை போக்கும், சூரைச்செடியில் கிடைக்கும் சூரைப்பழம் இரும்புச்சத்து நிறைந்தது, தேகவலிமையை அதிகப்படுத்த கூடியது.

முடக்கற்றான் கை, கால், மற்றும் மூட்டுவலி, முடக்குவாதத்தை போக்க கூடியது. கோவைச்செடியில் கிடைக்கும் கோவைக்காய், பழங்கள் மலஜல நோய்களை தீர்த்து ரத்த ஓட்டத்தை சீராக்கு மென சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரிய இந்த மூலிகை செடிகளுக்கு ஆதாரமான விளங்கும் கள்ளிவேலி செடிகளை ஒன்றியத்தில் பல இடங்களில் அழித்து விட்டு கம்பி வேலி அமைப்பதால் அரியவகையான மூலிகை செடிகளும் அதனுடன் சேர்ந்து மடிகின்றன.
எனவே அரிய வகை மூலிகைகள் வளர காரணமான கள்ளிவேலி செடிகளை விவசாயிகள் அளிக்காமல் காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளும், பொதுமக்களும் எடுத்துரைக்க முன் வர வேண்டும் என சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : cactus fence plants ,
× RELATED விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டும் மதிமுக வலியுறுத்தல்