×

மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை துவங்ககோரி நாகையில் இன்று கடையடைப்பு, பேரணி

நாகை, டிச.12: நாகையில் அரசு மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாகையில் இன்று (12ம் தேதி) ஒருநாள் கடையடைப்பு மற்றும் பேரணி நடத்தப்படும் என்று இந்திய வர்த்தக தொழிற்குழுமம் தலைவர் ரவி கூறினார். நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைய வலியுறுத்தி அனைத்து சேவை சங்கங்கள், வர்த்தகர்கள், நாகை நகர வளர்ச்சிக்கு பங்கேற்கும் தன்னார்வலர்கள், அனைத்து கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நாகை இந்திய வர்த்தக தொழிற்குழும அலுவலகத்தில் நேற்று நடந்தது. எம்எல்ஏ மதிவாணன், இந்திய வர்த்தக தொழிற் குழும நாகை தலைவர் ரவி, செயலாளர் சுந்தரவேலு, பொருளாளர் நிஜாம், துணைதலைவர் பாட்சா, இணைச் செயலாளர் கணேசன், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன், அதிமுக நகர செயலாளர் தங்ககதிரவன், காங்கிரஸ் கட்சி மீனவர் அணி அமைப்பாளர் ராஜேந்திர நாட்டார், மனிதநேய ஜனநாயக கட்சி விவசாய அணி மாநில செயலாளர் செய்யதுமுபாரக், மதிமுக நகர செயலாளர் ராஜராஜசோழன், மீனவகிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் இந்திய வர்த்தக தொழிற்குழுமம் தலைவர் ரவி கூறியதாவது: நாகை மாவட்ட தலைநகரம் என்ற அடிப்படையில் நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க அரசாணை வெளியிட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். நாகை மக்களின் நீண்டகால கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நாகையில் அமைக்க வேண்டும் என்ற கனவை நினைவாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாகையில் இன்று (12ம் தேதி) ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். மேலும் அனைத்து கட்சியினர், அனைத்து சேவை சங்கங்கள், அனைத்து வர்த்தகர்கள், அனைத்து மீனவ கிராம மக்கள் என்று நாகை பகுதி மக்கள் எல்லோரும் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணி இன்று காலை 10 மணிக்கு புதிய பஸ்ஸ்டாண்ட்டில் தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரை நடைபெறும் என்று கூறினார்.

Tags :
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு