×

ஆனை கொம்பன் நோய் தாக்குதலில் 1,000 ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு நாகை மாவட்ட விவசாயிகள் கவல

நாகை, டிச.12: நாகை மாவட்டத்தில் ஆனை கொம்பன் நோய் தாக்கியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டத்தில் நடப்பாண்டில் மூன்று லட்சத்து 45 ஆயிரம் ஏக்கரில் நேரடி மற்றும் நடவு பணிகளில் சம்பா சாகுபடி நடந்து வருகிறது. மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்த மழையினாலும் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நல்லமுறையில் நடந்துள்ளது. இதனால் மகசூல் அதிகரிக்கும் என்ற மகிழ்ச்சியில் நாகை மாவட்ட விவசாயிகள் காத்திருந்த நேரத்தில் திடீர் திடீரென மாவட்டத்தில் பெய்த கனமழையால் மழைநீர் வடிவதற்கு வழியில்லாமல் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் நாகை மாவட்டத்தில் திருக்குவளை, ஆதமங்கலம், மாவிலங்கை, தென்மருதூர், கீரங்குடி, கீழகண்ணாப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர்களில் ஆனை கொம்பன் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கிய பயிர்கள் அனைத்தும் கதிர் இல்லாமல் வெறும் தண்டு மட்டுமே காணப்படுகிறது. இதனால் பயிர்களின் மேல் பகுதி மஞ்சள் நிறமாக மாறி சருகுபோல காய்ந்து விடுகிறது. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் கடனை கூட கட்டமுடியாமல் திகைத்து போய் உள்ளனர். இந்த நோயிலிருந்து சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்கு வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்திலிருந்து நெற்பயிர்களை பாதுகாத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பிரவீன் பி நாயர் கூறியதாவது: நெல் பயிர் மூழ்குவதை தடுத்திட தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரினை வடித்திட விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும். வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும். வடிகால் வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காது வடிந்திடும் வகையில் பொதுப்பணித் துறையினரை அணுகி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம் பயிர்கள் அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் சிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ சிங்சல்பேட் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும். பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீர் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டால் 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் நீரில் முந்தைய நாள் மாலை வேளையில் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும். தண்ணீர் தேக்கத்தினால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவினை ஒருநாள் இரவு கலந்துவைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும்.

Tags : Samba ,
× RELATED சம்பா, தாளடி பருவத்தில் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்