×

செங்கல்பட்டு அருகே அனுமந்தபுரத்தில் பரபரப்பு விவசாயி வீட்டில் குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர் பறிமுதல்

சென்னை, டிச.12: செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில், மர்மபொருள் வெடித்த விவகாரம் தொடர்பாக விவசாயி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிராமம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு, ராணுவம் ரயில்வேதுறை, தமிழக காவல்துறை ஆகிய துறை உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், உதிரிபாகங்கள் அனுமந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கும். கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை துப்பாக்கி பயிற்சி நடந்தது.இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் மதியம் அனுமந்தபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் (47), பயிற்சி மையத்தில் வெடிக்காத ஒரு வெடிபொருளை பைக்கில் எடுத்து கொண்டு புறப்பட்டார். புளியந்தோப்பு தெருவில் சென்றபோது, அந்த பொருள் கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ராமகிருஷ்ணனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே பகுதியில் உள்ள வீட்டின் வாசலில் துணி சலவை செய்து கொண்டிருந்த கோவிந்தம்மாள் (60) என்பவர் காயமடைந்தார். மேலும், ஓட்டு வீடு அதிர்வில் சேதமானது.

இரும்பு மின் கம்பத்தில் பெரிய துளை விழுந்தது. சிமென்ட் சாலையில் விரிசல் ஏற்பட்டது.தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், திருப்போரூர் தாசில்தார் செந்தில்குமார், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். வெடித்த பொருளை ஆய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து படுகாயமடைந்த ராமகிருஷ்ணனிடம் விசாரித்தனர். அவர், புளியந்தோப்பு தெருவில் சென்றபோது, திடிடீரென வெடித்தது. அதில், தனது காலில் காயம் ஏற்பட்டு, மயங்கியதாகவும், பின்னர் போலீசார் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலையில் போலீசார், ராமகிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அனுமந்தபுரம் துப்பாக்கி பயிற்சி மையத்தில் இருந்து, வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை ராமகிருஷ்ணன், அவரது வீட்டில் குவியல் குவியலாக பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வண்டலூர் அருகே முருகமங்கலத்தில் உள்ள வெடிகுண்டு கிடங்கில் வைத்தனர்.

இதுகுறித்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை ெபறும் ராமகிருஷ்ணனிடம் துருவி துருவி விசாரித்தோம். ஆனால், அவரது பேச்சில் முரண்பாடு தெரிந்தது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை செய்தபோது, ஏராளமான ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்தோம். இதையடுத்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தினோம். அதில், ராக்கெட் லாஞ்சரை ராமகிருஷ்ணன், பழைய இரும்புக்காக எடுத்து வந்ததாக கூறினார். அதில் வெடிக்காத குண்டும் இருந்தது. அதனை பாதுகாப்பாக வைத்துள்ளோம். நீதிமன்ற உத்தரவை பெற்று, வெடிக்காத குண்டுகளை செயலிழக்க வைப்போம்’’ என்றார். அனுமந்தபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் ராமகிருஷ்ணனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்பு மானம்பதி  பகுதியில் வெடிகுண்டு வெடித்து 2 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். அதில்,  வெடிக்காத அதிபயங்கர ராக்கெட் லாஞ்சரை, வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க  வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rocket launcher ,house ,Parambakkam Farmer ,Chengalpattu ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்