×

கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் தாசில்தாரை கண்டித்து வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி, டிச. 12: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதியில் காய்கறி கடை, செல்போன் கடை, மளிகை கடை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க எளாவூர், ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, அயநல்லுர், தேர்வழி, எஸ்.ஆர்.கண்டிகை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து   பொதுமக்கள் வருகின்றனர். அவர்கள் வாங்கும் பொருட்களை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் வைத்து  கொடுப்பதாக திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு  புகார்கள் வந்தது.
இந்த புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் செந்தாமரைச் செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு உள்ளிட்ட அதிகாரிகள் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, ஆறு கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட சுமார் 200 கிலோ பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர். அத்துடன் 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதையறிந்த 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டனர். அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தாசில்தாரை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கடைகளுக்குள்  அத்துமீறி நுழைந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிபூண்டி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், பேரூராட்சி அலுவலர் வெற்றி, அரசு வருவாய் ஆய்வாளர் கந்தசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “ சோதனை என்ற பெயரில் அத்துமீறி கடைகளுக்குள் புகும் அதிகாரிகளால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது” என்று கூறினர்.  இதற்கு அதிகாரிகள், “நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தான், தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். எந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தஎந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படலாம் என்பதை உறுதிப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்” என வியாபாரிகளிடம் விளக்கினர். இதை ஏற்ற பின் வியாபாரிகள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் ஒரு மணிநேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags : Merchants ,streets ,stores ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...