ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுதாக்கல் களைகட்டியது ஒரே நாளில் 1,134 பேர் மனு செய்தனர்

திருவள்ளூர், டிச . 12:  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் களை கட்டியது. பவுர்ணமி நாளான நேற்று மட்டும் 1,134 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கியது. பிரதானக் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், பவுர்ணமி நாளான நேற்று அதிகளவு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நெரிசலை தவிர்க்க, மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய அலுவலகங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, அதிக கூட்டத்தை அழைத்து வருபவர்களை கண்காணிக்கவும், அனைத்து கூட்டமும், ஒன்றிய அலுவலகத்துக்குள் வருவதை தடுக்கவும், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். அதன்படி, அலுவலக வளாகத்துக்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்பவரும், முன்மொழிபவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு மற்றும் மாவட்ட குழு வார்டுகளுக்கு வேட்பு மனுக்கள் பெற தனித்தனியாக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.

மனுதாக்கல் முதல் நாளான 9ம் தேதி, மொத்தமுள்ள 4,725 பதவிகளுக்கு, 179 பேர் மனுதாக்கல் செய்தனர். 2ம் நாளான நேற்று முன்தினம் 123 பேர் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று பவுர்ணமி என்பதால் 1,134 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
மாவட்டத்தில் 3 நாட்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 2 பேர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 31 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 401 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,016 பேர் என மொத்தம் 1,450 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். பொன்னேரி:  மீஞ்சூர் ஒன்றியத்தில் 42 பேர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஒரே ஒரு நபர் மட்டும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் வேட்பு மனு அளித்துள்ளனர். இந்த வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கென்னடி, பூபால, ராயன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். கவுன்சிலர் பதவிக்கான வேட்பு மனுவினை சுயேச்சையாக நிற்கும் மேலூர் ரமேஷ் என்பவர் அளித்துள்ளார்.

ஆவடி :  வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஊராட்சி தலைவர் பதவிகள். 123 வார்டு உறுப்பினர், 8 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு வருகின்றன 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 9ம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் அம்பத்தூரில் உள்ள வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஆவடி அருகே வெள்ளச்சேரி ஊராட்சிக்கு சுரேஷ், மதுரை முத்து, செல்வி, செல்வமணி ஆகியோரும் பொத்தூர் ஊராட்சிக்கு சுரேஷ், அரக்கம்ப்பாக்கம் ஊராட்சிக்கு கோவிந்தராஜன், உமாகோவிந்தராஜன் ஆகியோரும் ஆலத்தூர் ஊராட்சிக்கு அனிதா, கல்பனா ஆகியோரும் கர்லப்பாக்கம் ஊராட்சிக்கு கல்பனா என்பவரும் மோரை ஊராட்சிக்கு திவாகரன், நதியா, குமார், இளங்கோ ஆகியோரும் அடையாளம்பட்டு ஊராட்சிக்கு தமிழ், இலக்கியா என்பவரும் வெள்ளானூர் ஊராட்சிக்கு பிரபாகரன், செந்தில்குமார், பாரதி ஆகியோரும் அயப்பாக்கம் ஊராட்சிக்கு வில்லிவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் துரை.வீரமணி ஆகிய 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் மேற்கண்ட ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்களுக்கு 62 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். மேலும் வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் வார்டு 1க்கு ஜெய்சங்கரும் வார்டு 3க்கு மல்லிகா, குமரன் ஆகியோரும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

Tags : Elections ,
× RELATED மாநகராட்சி கமிஷனர் உத்தரவு மக்களின் மனுக்கள் மீது ஒரு வாரத்தில் தீர்வு