×

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

புழல், டிச. 12:  செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்துக்குள் சென்றுவர இடையூறாக நிறுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் பேருந்து நிலையத்தை சுற்றி புழல், பாடியநல்லூர், செங்குன்றம், வடகரை, தீர்த்தக்கரையம்பட்டு, விளாங்காடுபாக்கம்,வடபெரும்பாக்கம், கிராண்ட்லைன், புள்ளிலைன், பம்மதுகுளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்பையோர் பல்வேறு இடங்களுக்கு சென்றுவர மாநகர பஸ் மற்றும் அரசு பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இவர்களது வசதிக்காக செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து பாரிமுனை, வள்ளலார் நகர், கிண்டி, தாம்பரம், திருவொற்றியூர், பூவிருந்தவல்லி, ஆவடி, கோயம்பேடு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பழவேற்காடு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சத்தியவேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுககு 100க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள், அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. வெளியூர் மற்றும் உள்ளூர்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வதால் எப்போதும் செங்குன்றம் அண்ணாபேருந்து நிலையம் பரபரப்பாக காணப்படும். மேலும், கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள், எளிதில் செங்குன்றம் பஸ்நிலையம் வருவதற்கும், செல்வதற்கும் ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு வரும் ஷேர் ஆட்டோக்கள் பஸ் நிலையத்தின் முன் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்படுகிறது.

மேலும், இருசக்கரவாகனங்களில் பஸ் நிலையத்துக்கு வருபவர்கள், தங்களது வாகனங்களை சாலையோரத்திலோ அல்லது பஸ் நிலையத்துக்குள்ளோ நிறுத்தி விட்டு தாங்கள் செல்லவேண்டிய பகுதிகளுக்கு பஸ்சில் செல்கின்றனர். இதனால் மாநகர பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் சென்றுவர சிரமமாக உள்ளது.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்துக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட மாநகர, அரசு, தனியார் பேருந்துகள் திருவள்ளூர், வண்டலூர், சத்தியவேடு உள்பட பல இடங்களில் இருந்து வந்து செல்கிறது. இதில் பயணிக்க வரும் பொதுமக்களுக்கு போதுமான கழிவறை மற்றும் இருக்கை வசதி இல்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீரும் இல்லை. இதனால், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருப்பவர்கள் பஸ் நிலையத்துக்குள் ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்று இயற்கை உபாதை கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் இல்லாததால் கடைகளில் இருமடங்கு விலை கொடுத்து தண்ணீர் வாங்கி தாகத்தை தீர்க்க வேண்டி உள்ளது. மேற்கூரை இல்லாததால் வெயிலிலும், மழையிலும் நின்று அவதிக்குள்ளாகின்றனர். மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் மற்றும் இருசக்கரவாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
 எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்நிலையம் முன் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ, ஷேர்ஆட்டோ, இருசக்கரவாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி செங்குன்றம் போலீசார் அவ்வப்போது ரோந்து வந்து பஸ்சுக்காக காத்திருக்கும் இளம்பெண்களை குறிவைத்து கேலி செய்பவர்களை பிடிக்கவேண்டும். எப்போதும் பஸ்நிலையம் சுகாதாரமாக வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “நாங்கள் பஸ் பயணம் செய்ய வரும்போது, பேருந்து நிலையம் முன்பு ஆட்டோக்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் குறுக்கு நெடுக்குமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிதும் சிரமப்பட்டு வருகிறோம். இதுகுறித்து  ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டால் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு செய்கின்றனர். எனவே, இதில் சம்பந்தப்பட்ட பேருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் செங்குன்றம் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து பயணிகள் சிரமமின்றி பஸ் ஏறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்றனர்.

Tags : vehicle owners ,bus stand ,
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி