×

அரசு ஆவணங்களில் மாற்றம் செய்து சான்று, அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்

கூடுவாஞ்சேரி, டிச.12: காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, புதிய மாவட்டமாக செங்கல்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 29ம் தேதி துவங்கி வைத்தார். அதேபோல், செங்கல்பட்டு வட்டத்தில் இருந்து பிரித்து, வண்டலூர் புதிய தாலுகாவும், தாம்பரம் ஆர்டிஓ அலுவலகமும் துவங்கப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டம், தாலுகா, ஆர்டிஓ அலுவலக கட்டுபாட்டில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் ரேசன் கார்டு, வங்கி புத்தகம், அஞ்சலக புத்தகம், உள்பட பல்வேறு அரசு சான்றுகளில் ஏற்கனவே பழைய மாவட்டம், தாலுகா, ஆர்டிஓ அலுவலகத்தின் முகவரி உள்ளது.
இதில், பல்வேறு சலூகைகளுக்காக அரசு சார்பில் வழங்கப்படும் சான்றுகள், அடையாள அட்டைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகா, தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தின் பெயரை ஆவணங்களில் மாற்றி சான்றுகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ள காட்டாங்கொளத்தூர் குறுவட்டத்தில் அடங்கிய வல்லாஞ்சேரி, தைலாவரம், காயரம்பேடு, நின்னக்கரை, கூடலூர், பொத்தேரி, கோனாதி, காட்டாங்கொளத்தூர், கொருக்கந்தாங்கல் ஆகிய கிராம மக்கள், செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு சுமார் 3 பஸ்கள் மூலம் 25 கிமீ வரை பல்வேறு சிரமங்களுடன் சென்று வரவேண்டும். பொதுமக்கள் ஒரே பஸ்சி பயணம் செய்து எளிதில் சென்று வர 5 கிமீ தூரம் உள்ள வண்டலூர் தாலுகாவில் காட்டாங்கொளத்தூர் குறு வட்டத்தை சேர்க்க வேண்டும். இதேபோல், நெடுந்தொலைவில் உள்ள பெரும்புதூர் தாலுகா கட்டுபாட்டில் உள்ள ஆதனூர், மாடம்பாக்கம், ஒரத்தூர் ஆகிய ஊராட்சிகளை வண்டலூர் தாலுகாவில் சேர்க்க வேண்டும். இதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...