×

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதார சீர்கேடு

செங்கல்பட்டு, டிச.12: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சியில், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பீதியில் பொதுமக்கள் வாழ்கின்றனர். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த வாரம் பெய்த கனமழையால் இந்தப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஆனால், முறைான வடிகால்வாய் வசதி இல்லாமல், வீடுகள் மட்டும் சாலைகளை சூழ்ந்து மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் என்ற பீதியில் உள்ளனர்.

இதையொட்டி, வீடுகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் சாலையில் தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால், அவர்களுக்கு தோல் வியாதி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
இதுபற்றி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கும், பல்வேறு துறை அலுவலர்களுக்கும் பலமுறை கோரிக்கை வைத்து, அகற்றும்படி கூறியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சமீபத்தில் பெய்த மழையால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாலைகள் குடியிருப்புகளில் சூழ்ந்து மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. மழைநீரை வெளியேற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதில், இரவு நேரங்களில் பாம்பு உள்பட பல்வேறு விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன.  இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரமாக மழைநீர் வெளியேற வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : Panchayat ,areas ,Kattankolathoor Union Thimmavaram ,
× RELATED லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100...