×

சூறைக்காற்றில் விசைப்படகு மூழ்கியது நடுக்கடலில் தத்தளித்த 17 மீனவர்கள் மீட்பு

குளச்சல், டிச. 12:  சூறைக்காற்றில் விசைப்படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 17 மீனவர்கள் மீட்கப்பட்டனர். குமரி மாவட்டம் அழிக்கால்,  பிள்ளைத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ததேயுஸ், மைக்கேல், வசந்த்,  அருள், கபில், டான், லூக்காஸ், கன்னையா, ஜாக்‌சன், ஜார்ஜ் உட்பட 10 பேர்  மற்றும் மேற்கு வங்கம் உள்பட வட மாநிலங்களை சேர்ந்த 7 பேர் என 17 பேர்  கடந்த 9ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கேரள மாநிலம் முனம்பம் பகுதியை சேர்ந்த எபி என்பவரின்  விசைப்படகில் கடலுக்கு சென்றனர். கன்னியாகுமரி கடல்  பகுதியில் இருந்து 17 நாட்டிக்கல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்து  கொண்டிருந்தனர்.   அப்போது எதிர்பாராதவிதமாக மீன்பிடிக்க விரித்திருந்த  வலை இயந்திரத்தில் சுற்றியது.

இதில் விசைப்படகு சேதமடைந்தது. இதையடுத்து  மெதுவாக அவர்கள் கரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது  திடீரென வீசிய சூறைக்காற்றினால் படகு தத்தளித்தது. பின்னர் படகு  மூழ்கத்தொடங்கியது. இதையடுத்து 17 மீனவர்களும் லைப் ஜாக்கெட்  அணிந்து கடலில் குதித்து கரைநோக்கி நீந்தினர். அப்போது  அவ்வழியாக குளச்சல் மற்றும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 3 விசைப்படகுகள் வந்தது. கடலில் தத்தளித்த மீனவர்கள் அந்த படகுகளில் ஏறி நேற்று  காலை குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கரை சேர்ந்தனர். அதிர்ஷ்டவசமாக  மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Tags : fishermen ,sea ,
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்