வாட்ஸ்அப் வைரலால் பரபரப்பு பள்ளி வகுப்பறையில் படுத்து தூங்கிய ஆசிரியர்

வேலூர், டிச.12: நெமிலி அருகே பள்ளி வகுப்பறையில் படுத்து தூங்கிய ஆசிரியரால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய சம்பவம் வாட்ஸ்அப் வைரலால் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் காய்ச்சலால் ஆசிரியர் படுத்திருந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கன்னிகாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் ஒருவரும், உதவி ஆசிரியர் ஒருவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இப்பள்ளியின் உதவி ஆசிரியர் தள்ளாடியபடி வந்து வகுப்பறையில் படுத்துவிட்டதாக கூறி வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த ஆசிரியர் போதையில் தள்ளாடியபடி வந்ததாக பரவிய தகவல் பரபரப்பை அதிகப்படுத்தியது. ஆசிரியர் தள்ளாடியபடி வந்து படுத்ததை அதிர்ச்சியுடன் பார்த்தபடி மாணவிகள் தரையில் அமர்ந்திருப்பதும் தெரியவந்தது.

Advertising
Advertising

இந்த சம்பவம் தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் விசாரணைக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு மார்ஸ் உத்தரவிட்டார். அதன்பேரில் வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயராஜ். சம்பத்குமார், கண்காணிப்பாளர் பசுபதி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார், உதவி ஆசிரியர் மோகன், பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல் பணிக்கு வந்த பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் எஸ்எஸ்ஏ ஆடிட் பணிக்காக நெமிலி செல்வதாகவும், எனவே பொறுப்பை உதவி ஆசிரியர் மோகனிடம் கவனிக்கும்படி கூறிவிட்டு கிளம்பி சென்றுள்ளார்.

ஆனால், உதவி தலைமை ஆசிரியர் தனக்கு உடல்நிலை சரியில்லை. தான் விடுப்பு எடுக்கப்போவதாக கூறியுள்ளார். அதை ஏற்காமல் தலைமை ஆசிரியர் சென்று விட உதவி ஆசிரியர் பள்ளி வகுப்பறையிலேயே படுத்து விட்டதாக தெரிய வந்தது. இதுதொடர்பான அறிக்கையை உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸூக்கு வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் அனுப்பியுள்ளார்.

Related Stories: