ஒரு மாத பரோல் நாளையுடன் முடிகிறது வேலூர் சிறையில் பேரறிவாளன் மீண்டும் அடைப்பு

வேலூர், டிச.12: ஒரு மாத பரோல் முடிந்து நாளையுடன் முடிவடைவதை தொடர்ந்து, பேரறிவாளன் வேலூர் சிறையில் நாளை மாலைக்குள் அடைக்கப்படுவார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் சிகிச்சைக்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுடன் இருக்கவும், சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் அவரது தாய் அற்புதம்மாள் சிறைத்துறையிடம் மனு அளித்தார்.

Advertising
Advertising

இதையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து புழல் சிறையில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதி வேலூர் மத்திய சிறைக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து ஒரு மாதம் பரோலுக்கு ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு, பேரறிவாளன் சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியிலும், தந்தை குயில்தாசனுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும் உடன் சென்று வந்தார். இந்நிலையில், பேரறிவாளனுக்கு வழங்கிய ஒரு மாத பரோல் நாளையுடன் முடிவதால், நாளை மாலைக்குள் வேலூர் சிறையில் மீண்டும் அடைக்கப்பட உள்ளதாகவும், அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: