×

ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் 3வது நாளில் 583 பேர் மனுதாக்கல்

திருவண்ணாமலை, டிச.12: திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 3வது நாளான நேற்று 583 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. அதையொட்டி, கடந்த 9ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. மனுதாக்கல் செய்ய வரும் 16ம் தேதி கடைசி நாளாகும். அரசு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. எனவே, 860 கிராம ஊராட்சி தலைவர்கள், 6,207 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 341 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 34 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 7,442 பதவிகளுக்கும் மட்டும் வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 27ம் தேதி, திருவண்ணாமலை, அனக்காவூர், செய்யாறு, கீழ்பென்னாத்தூர், பெரணமல்லூர், தண்டராம்பட்டு, தெள்ளாறு, துரிஞ்சாபுரம், வெம்பாக்கம் ஆகிய 9 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். மேலும், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 30ம் தேதி, ஆரணி, மேற்கு ஆரணி, கலசபாக்கம், போளூர், செங்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி, ஜவ்வாதுமலை, புதுப்பாளையம் ஆகிய 9 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைெபறும்.

ஊரக பகுதி உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல் ெதாடங்கிய முதல் நாளன்று மாவட்டம் முழுவதும் 172 பேரும், இரண்டாம் நாளன்று 73 பேரும் வேட்புமனுதாக்கல் செய்தனர். தேர்தல் நடைபெறுமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்ற குழப்பமான மனநிலையே பரவலாக காணப்படுகிறது. எனவே, கடந்தகால உள்ளாட்சித் தேர்தலைப் போல, வேட்புமனுதாக்கல் செய்ய ஆர்வம் இல்லை. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 15 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 219 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 348 பேர் உள்பட மொத்தம் 583 பேர் மனு தாக்கல் செய்தனர். மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 828 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மனுதாக்கல் செய்ய இன்னும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, நாளை முதல் மனுதாக்கல் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : petitioners ,elections ,government ,
× RELATED மக்களவை தேர்தல் நேரத்தில் ரூ.1.65 லட்சம்...