×

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்

திருவண்ணாமலை, டிச.12: கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக, மகா தீபத்தின் போது காட்சியளித்த பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், ஐயங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடந்தது. திருவண்ணாமலையில் விமரிசையாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் 10ம் நாளான நேற்றுமுன்தினம், 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த தீபத்திருவிழா உற்சவம் நிறைவானதால், கோயில் தங்கக் கொடிமரத்தில் நேற்றுமுன்தினம் இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டது. தொடர்ந்து, மகா தீபத்தின்போது தீப தரிசன மண்டபத்தில் தங்க விமானங்களில் எழுந்தருளி காட்சியளித்த பஞ்சமூர்த்திகள் நேற்றுமுன்தினம் இரவு கோயிலில் இருந்து புறப்பட்டு, மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நள்ளிரவு தொடங்கிய சுவாமி வீதி உலா நேற்று அதிகாலை நிறைவடைந்தது.

இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 11.10 மணிக்கு தொடங்கி, இன்று காலை 11.05 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று மாலை தொடங்கி இரவு முழுவதும் விடிய, விடிய ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வழிபட்டனர். மேலும், கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் முடிந்ததும், 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, முதல் நாளான நேற்றிரவு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதையொட்டி, ஐயங்குளத்தைச் சுற்றிலும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை. குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும், தீபத்திருவிழா நிறைவடைந்ததும், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, சுவாமி கிரிவல புறப்பாடு இன்று அதிகாலை நடக்கிறது. மேலும், 2ம் நாள் தெப்பல் உற்சவமான இன்று இரவு, ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.

Tags : Chandrasekhar Theppal Festival ,
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே