×

திருவண்ணாமலை தீபத்திருவிழா முடிந்து ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை, டிச.12: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை காண வந்த பக்தர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்தனர். ரயிலில் முண்டியடித்து ஏறியதால் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், கிரிவலம் வந்து வழிபட்டனர்.

இந்நிலையில், தீபத்திருவிழாவிற்கு வந்த பக்தர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் செல்வதற்காக, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். கூட்டம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. அதன்படி, நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் பக்தர்கள் முண்டியடித்தப்படி ஏறினர். அப்போது, வயதானவர்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் ரயிலில் ஏற முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

மேலும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் தங்களுக்கு இடம் கிடைக்காது என்ற எண்ணத்தில் ஜன்னல் வழியாக சிறுவர்களை ரயில் பெட்டிக்குள் ஏற்றி விட்டனர். இதானல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, பக்தர்களை பாதுகாப்பாக ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags : pilgrims ,railway station ,Thiruvannamalai ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!