×

போக்குவரத்து போலீசார் கவனிப்பார்களா? ராஜபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட தூய்மை இந்தியா திட்டப்பணி

ராஜபாளையம், டிச. 11: ராஜபாளையத்தில் கிடப்பில் போடப்பட்ட தூய்மை இந்தியா திட்டப் பணியால், வரிப்பணம் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், பொதுவாக திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்காமல், அதிகாரிகள் தங்களது விருப்பத்திற்கு திட்டப்பணிகளை தொடர்ந்து, பின்னர் கிடப்பில் போடுவதாக புகார் எழுந்துள்ளது. எந்த ஒரு பணிகளும் முழுமையடையாமல் கிடக்கிறது. நகரில் அனைத்து வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் பணிகள் நடந்து வருகின்றன. ஆங்காங்கே பள்ளங்களை தோண்டி பணிகளை விரைவாக முடிக்காமல், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியாக பணிகளை நிறைவு செய்துவிட்டு பின், மற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகராட்சி சார்பில் தெருக்களில் சேகரமாகும் குப்பைகளை பிரித்தெடுத்து, உரம் தயாரிப்பதற்காக, சில இடங்களை தேர்வு செய்து பணிகளை தொடங்கினர். ஆனால், பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகம் வளாகம் மற்றும் மங்காபுரம் அருகே அமைக்கப்பட்ட உரம் தயாரிப்புக்கு தொடங்கிய பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, ராஜபாளையம் நகராட்சியில் திட்டப்பணிகளை விரைவாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : traffic cops ,Rajapalayam ,
× RELATED தாயின் கள்ளக்காதலனை குத்தி கொன்ற மகன் ராஜபாளையத்தில் பயங்கரம்